Published : 30 Aug 2025 10:12 AM
Last Updated : 30 Aug 2025 10:12 AM
சென்னை: ‘மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரும், திரைப்பட நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ்.
டி.வி.யில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாதம்பட்டி ரங்கராஜுடன் நான் பழகும்போது அவருக்கு ஏற்கெனவே திருமணமானது எனக்கு தெரியாது. ஒருகட்டத்தில் எனக்கு தெரியவந்தபோது, ‘முதல் மனைவியை சட்டரீதியாகப் பிரியப் போகிறேன். தற்போது பிரிந்துதான் வாழ்கிறேன்’ என்று கூறினார். பின்னர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோயிலில் என்னை அவர் திருமணம் செய்து கொண்டார்.
நான் கர்ப்பமும் அடைந்தேன். அப்போது, குழந்தை வேண்டாம், கருக்கலைப்பு செய்து விடு என அவர் வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். இந்நிலையில் 2 மாதமாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 2 வாரத்துக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அப்போது ‘உன்னிடம் பேச விரும்பவில்லை’ என்று கூறி, என்னை தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். அவர்தான் என் கணவர். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா. அவருடன் சேர்ந்து வாழவே நான் விரும்புகிறேன்.
இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஜாய்கிரிசில்டா, நடிகர் விஜய்யின் ‘ஜில்லா’, ரவி மோகனின் ‘மிருதன்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். 2018-ல் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்குப் பின்னர் சினிமாவில் பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட ஜாய் கிரிசில்டாவுக்கும், அவரது கணவருக்கும் திருமணமான 5 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2023-ல் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT