Published : 30 Aug 2025 06:00 AM
Last Updated : 30 Aug 2025 06:00 AM
சென்னை: கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களைக் காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்திய கடலோரப் பகுதிகளுக்கான பல்வகை ஆபத்து சேவைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசியதாவது: மீனவர்கள் நலன் காக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 'மீனவ நண்பன்' என்ற ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்கி இருக்கிறோம். அதில் வானிலை நிலவரம், காற்று வீசும் திசை, வேகம், மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் போன்ற தகவல்களை வழங்கி வருகிறோம்.
மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும்போது, மாரடைப்பு போன்ற பல்வேறு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அப்போது அவர்களைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழப்பு நேரிடுகிறது. நிலப் பகுதிகளில் அரசு சார்பில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. அதேபோல், கடல் ஆம்புலன்ஸ் சேவையை அவசியம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையது அடா ஹஸ்னயின் பேசும்போது, ‘‘பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்க ‘SACHAT’ என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இது ஸ்மார்ட் போனை சைலன்ட் மோடில் வைத்திருந்தாலும், முன்னெச்சரிக்கை தகவல் வரும்போது, அபாய ஒலியை எழுப்பும்’’ என்றார்.
‘இன்காய்ஸ்’ நிறுவன இயக்குநர் பாலகிருஷ்ண நாயர் பேசும்போது, ‘‘இந்நிறுவனம், வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து சுனாமி, ராட்சத கடல் அலை தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. அந்தமான் பகுதியில் கடலுக்கடியில் 270 கிமீ ஆழத்தில் கேபிளை பதித்து, நிலநடுக்கம், சுனாமி போன்ற முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது.
முன்னெச்சரிக்கை தகவல்களை மேலும் வலுப்படுத்த, பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து வருகிறோம்” என்றார். மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியக தென் மண்டலத் தலைவர் பழனிசாமி, என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT