Published : 30 Aug 2025 07:59 AM
Last Updated : 30 Aug 2025 07:59 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு நேற்று முன்தினம் 22 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றை வனத் துறையினர் மீட்டு, பாதுகாப்பாக வனப் பகுதியில் விட்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளதாக, அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்துக்கு கடந்த 26-ம் தேதி தகவல் வந்தது. அதன்பேரில், காப்பக நிர்வாகிகள் அங்கு சென்று, அங்கிருந்த 3 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை மீட்டு, அருங்கானுயிர் காப்பகத்துக்கு கொண்டுவந்தனர்.
தொடர்ந்து, அந்தப் பாம்பின் உடல்நலம் குறித்து சோதனை செய்தபோது, அது கர்ப்பமாக இருப்பதும், விரைவில் குட்டிகளை ஈன்றுவிடும் நிலையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கண்ணாடி விரியன் பாம்பை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அந்த கண்ணாடி விரியன் பாம்பு 22 தோல் முட்டைகளை ஈன்றது. சிறிதுநேரத்தில், அந்த முட்டைகளில் இருந்து பாம்புக் குட்டிகள் வெளியே வந்தன.
இதுகுறித்து காப்பக நிர்வாகி ஆர்.சதீஷ்குமார் கூறியதாவது: கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகள் ஈன்றது குறித்து தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது அறிவுறுத்தலின்பேரில், தஞ்சாவூர் வனச்சரகர் ஜோதிகுமார் வழிகாட்டுதலில், வனத் துறையினரிடம் கண்ணாடி விரியன் பாம்பு மற்றும் அதன் குட்டிகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன. பின்னர், அவற்றை வனத் துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT