Published : 30 Aug 2025 07:29 AM
Last Updated : 30 Aug 2025 07:29 AM
சிவகங்கை: திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்து வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தினமும் 6 முகாம்கள் என்ற வகையில், வாரத்துக்கு 4 நாட்கள் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட திருப்புவனம் பேரூராட்சி மற்றும் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்கள் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்தன. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற அதிகாரிகள், அந்த மனுக்களை மீட்டனர். இம்மனுக்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்திட்ட அசல் மனுக்களாக இருந்தன. இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் விசாரிக்கின்றனர். தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து, பல மணி நேரம் காத்திருந்து அளித்த மனுக்கள் ஆற்றில் மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி கூறியதாவது: ஆற்றில் மனுக்கள் மிதந்தது குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட 6 பட்டா மாறுதல் மனுக்களின் நகல்கள் இருந்தன. அந்த மனுக்கள் மீது ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுள்ளன. அத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்களும் இருந்தன.
மனுக்களை ஆற்றில் வீசியது தொடர்பாக, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாகப் பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும், இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோட்டாட்சியர் மனு அளித்துள்ளார். அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை எடுக்கவில்லை... ஆற்றில் கிடந்த மனுக்களில் பூவந்தியைச் சேர்ந்த செல்வி என்பவரது மனுவும் இருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “பட்டா மாறுதல் குறித்து மனு கொடுத்திருந்தேன். மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், வைகை ஆற்றில் எங்களது மனுக்களை ஏன் வீசவேண்டும்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT