Published : 30 Aug 2025 06:49 AM
Last Updated : 30 Aug 2025 06:49 AM
சென்னை: தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு: சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி அனிசா ஹுசைன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும், அங்கிருந்த எஸ்.லட்சுமி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை (2) ஐஜியாகவும் பணிமாறுதல் செய்யப்பட்டனர்.
இதேபோல், மத்திய அரசில் அயல் பணிக்குச் சென்று திரும்பிய டிஐஜி சோனல் சந்திரா வடசென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையராகவும், கோயம்புத்தூர் தலைமையக துணை ஆணையர் ஆர். சுஹாசினி புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை போக்குவரத்து காவல் மேற்கு துணை ஆணையராகவும், கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் எஸ்பி எம்.பி.திவ்யா பதவிஉயர்வு பெற்று கோயம்புத்தூர் தலைமையக துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த பி.விஜயகுமார் சென்னை போக்குவரத்து காவல் தெற்கு இணை ஆணையராகவும், அங்கிருந்த பண்டி கங்காதர் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையராகவும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 6-வது பட்டாலியன் துணை கமாண்டன்ட்டாக இருந்த பி.எச்.சஜிதா சென்னை சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சென்னை சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்பி பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.மேலும், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்பியாக உள்ள ஜி.ஜவஹர் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை சிபிசிஐடி மெட்ரோ மண்டலத்தின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே வகித்து வந்த பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT