Published : 29 Aug 2025 08:53 PM
Last Updated : 29 Aug 2025 08:53 PM
‘மாநிலங்களின் வரி வருவாயைப் பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மாநிலங்களின் வரி வருவாயைப் பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உட் கட்டமைப்புக்கு அவசியமான மாநில வருவாயைப் பாதிக்காத வகையில் இவை அமைய வேண்டும். வரிக்குறைப் பின் பயன்கள் நேரடியாகச் சாமானிய மக்களைச் சென்றடைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
இதுகுறித்து தயார் செய்யப்பட்டுள்ள ஒருமித்த வரைவறிக்கை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, மாநில வருவாயைப் பாதுகாத்து, நியாயமான முடிவுகளை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவு கோரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி விகித சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பாதிப்பை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT