Published : 29 Aug 2025 06:38 PM
Last Updated : 29 Aug 2025 06:38 PM
குன்னூர்: குன்னூரில் நீராதாரம் மற்றும் சதுப்புநில பகுதியில் டைடல் பார்க் திட்டம் கொண்டு வருவதைக் கண்டித்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி, பந்துமை பகுதி சதுப்புநிலம் மற்றும் நீராதாரம் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் குறிஞ்சி மலர் உட்படச் சோலை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இந்தப் பகுதியில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்ட முடிவு செய்து டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில், இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் சரவணகுமார், குருமூர்த்தி, ராஜ்குமார், லாவண்யா, உமாராணி, ரங்கராஜ் ஆகியோர், இந்தப் பகுதி குன்னூர் நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதார பகுதி, இந்தத் திட்டத்தை இந்த பகுதியில் கொண்டு வராமல் வேறு இடத்தில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் பகுதியில் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால் நீர் ஆதாரம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக திமுக கவுன்சிலர்கள் கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், அதிமுக கவுன்சிலர்கள் ஆறு பேர் நகராட்சி தலைவி சுசிலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் எனக் கூறி அவரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மார்க்கெட்டை இடித்துக் கட்டும் முடிவுக்கு, ஜனவரி பொங்கல் வரை கால அவகாசம் தர வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ஜாகீர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சரவணகுமார் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதே போல ஊட்டியில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரவிக்குமார், ஆணையர் வினோத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஊட்டி நகராட்சியில் வீடு கட்ட அனுமதி பெற இணையத்தில் விண்ணப்பிக்க முடியாமலும், ஒப்புதல் பெற முடியாமலும் தவித்து வருவதாக கவுன்சிலர் ஜார்ஜ் குற்றம்சாட்டினார். கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT