Last Updated : 29 Aug, 2025 02:41 PM

7  

Published : 29 Aug 2025 02:41 PM
Last Updated : 29 Aug 2025 02:41 PM

“பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்குமானது” - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படம் திறக்கப்படவுள்ளது குறித்து, ‘பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உலகமயமாகிறார் பெரியார். "ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் உலகம் முழுமைக்குமானவர்.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலையில் சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகள் இராகவி - சச்சிந்தர் திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர், “நம்முடைய தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம், தந்தை பெரியார். தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.

உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட இருக்கிறது. அதை என்னுடைய கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துக்கொண்டு இருக்கிறேன்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி - எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது.

அவர் வலியுறுத்திய, சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - ஏற்றத்தாழ்வு மறுப்பு - தன்னம்பிக்கை - அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை” எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x