Published : 29 Aug 2025 02:12 PM
Last Updated : 29 Aug 2025 02:12 PM
சென்னை: வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பிஹாருக்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழகத்துக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக, இப்போதே விழிப்புணர்வைப் பெற்று நாம் அதற்காக தயாராக வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகள் இராகவி - சச்சிந்தர் திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், "இன்றைக்கு நாடு என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் - என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் அதிகம் இங்கு விளக்கி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
அதற்காகதான், ராகுல் காந்தி ஒரு நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் பிஹார் சென்று, வாக்காளர் உரிமைப் பயணம் என்று ராகுல் காந்தி நடத்தி வரும் அந்த விழிப்புணர்வு பயணத்தில் நான் பங்கேற்றேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படக் கூடாது என்பதற்காக, இப்போதே நம்முடைய விழிப்புணர்வைப்பெற்று நாம் அதற்காக தயாராக வேண்டும் என்பதற்காகதான் அதை தடுத்து நிறுத்துவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பவர்தான் நம்முடைய என்.ஆர்.இளங்கோ. அதற்காக இந்த நேரத்தில் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் மனதார அவரை பாராட்ட, வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி, அதில் நீதியரசர்களை பங்கேற்க வைத்து பல ஆன்றோர்கள், சான்றோர்களையெல்லாம் அதில் பங்கேற்க வைத்து அதையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
நாளைய தினம் நான் ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம்.
இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது, முதலீட்டாளர்களும் தொழில்நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இப்போது இந்தப் பயணத்தில் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்றால், அதைப்பற்றி நாளைய தினம் நான் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கு முன்பு நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த விவரங்களையெல்லாம் சொல்லப்போகிறேன். ஆனால் அதற்கு முன்பு நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில், ஒரு முக்கியமான நிகழ்வை அறிவிக்க விரும்புகிறேன்.
நம்முடைய தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம், தந்தை பெரியார். தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.
உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட இருக்கிறது. அதை என்னுடைய திருக்கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துக்கொண்டு இருக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி - எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது.
அவர் வலியுறுத்திய, சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - ஏற்றத்தாழ்வு மறுப்பு - தன்னம்பிக்கை - அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT