Last Updated : 28 Aug, 2025 09:37 PM

1  

Published : 28 Aug 2025 09:37 PM
Last Updated : 28 Aug 2025 09:37 PM

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்!

வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அறிவித்தது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி காணாமல் போனதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது கணவர் பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு ஷமில்அகமதுவிடம் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் எனக்கூறி அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வீட்டுக்கு சென்ற ஷமில் அகமது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், பிறகு அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து, ஷமில் அகமது மரணத்துக்கு பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சபாரத்தினம், காவலர்களான அய்யப்பன், முரளி, நாகராஜ், சுரேஷ், முனியன் ஆகியோர் தான் காரணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூர் நகர காவல் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

பிறகு, 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆம்பூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். ஷமில் அகமது மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற வன்முறை மதக்கலவரமாக மாறியது. அந்த வழியாக வந்த பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆண், பெண் காவலர்கள் மீது கொடூர தாக்குதல் அரங்கேறியது.

இந்த கலவரத்தை தடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர். காவலர்களை எதிர்த்து இஸ்லாமியர்கள் நடத்திய பெருந்தாக்குதலால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போர்களமாக மாறியது. இந்த கலவரத்தில் ஆரணி கிராமிய காவல் நிலைய பெண் காவலர் ராஜலட்சுமி மற்றும் ரத்தினகிரி காவல் நிலைய காவலர் விஜயகுமார், வேலூர் எஸ்.பி.யாக இருந்த செந்தில்குமாரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 15 பெண் காவலர்கள் உட்பட 54 பேர் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக 191 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணையின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி வெளியாகும் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையை ஆக.28-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இன்று பகல் 1 மணியளவில் ஆம்பூர் வழக்கின் தீர்ப்பை நீதிபதி மீனாகுமாரி வாசித்தார். அதில், ஆம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 191 பேரில் 161 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆம்பூரைச் சேர்ந்த பைரோஸ், முனீர், ஜான் பாட்ஷா உட்பட 22 பேர் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கான தண்டனை விவரமும் தெரிவிக்கப்பட்டது.

குள்ளவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் சேர்த்து 23 லட்சத்து 99 ஆயிரத்து 152 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கலவரத்தில் பெருங்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் ராஜலட்சுமி மற்றும் ஆண் காவலர் விஜயகுமார் ஆகிய இருவருக்கும் தலா ரூ.10 லட்சமும், சிறு மற்றும் லேசான காயமடைந்த 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகையை திருப்பத்தூர் எஸ்.பி. தமிழக அரசிடம் இருந்து ஒரு மாத காலத்துக்குள் பெற்றுத்தர வேண்டும்.

மேலும், இந்த இழப்பீடு தொகையை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது உயிரோடு இல்லாத ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அஸ்லாம்பாட்சாவின் சொத்துகளை பறிமுதல் செய்து அதன் மூலம் அந்த தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.டி.சரவணன் ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x