Published : 28 Aug 2025 06:48 PM
Last Updated : 28 Aug 2025 06:48 PM
சென்னை: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மேற்கத்திய அதிகார அரசியலில் கொள்கை எனும் முகமூடியால் தண்டனை எனும் நாடகம் அடங்கேற்றப்படும் என்பதை அமெரிக்கா மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, காலனி ஆதிக்கத்தால் இந்தியா சூறையாடப்பட்டிருந்தாலும், நாம் ஒருபோதும் உடைந்துவிடவில்லை.
இப்போது, கடும் வரிகள்தான் ஏகாதிபத்தியத்தின் புதிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய - மைய உலக விதிகளுக்கு மண்டியிடாமல் நமது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பாதுகாக்க நாம் துணிந்தோம் என்ற ஒரே காரணத்துக்காக, வேடமணிந்த இந்த மறைமுகமான தண்டனைகள் நம் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நமது ஏற்றுமதியாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி உண்மையில் வர்த்தகத்துக்கோ, உக்ரைன் தொடர்பாகவோ அல்ல. அது நமது உறுதியைக் குலைக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்ட ஓர் அரசியல் தடியடி. சீனாவை நெருக்குவதற்கு அமெரிக்கா துணிவதில்லை. ஏனென்றால் சீனா முக்கியமான விநியோகச் சங்கிலிகளில் தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது.
21-ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆதாரங்களான அபூர்வ கனிமங்கள், காந்தங்கள், சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பேனல்கள், லித்தியம் பேட்டரிகள் போன்றவற்றை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா அவற்றைச் சார்ந்திருக்கிறது. மகாத்மா காந்தி நமக்கு நினைவூட்டிய பாடம் இதுதான்: தற்சார்பு என்பது ஒரு முழக்கம் அல்ல; அது நமது எதிர்காலத்துக்கான ஒரு பாதுகாப்புக் கேடயம்.
நமது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் இதயத் துடிப்பான திருப்பூர், சூரத் மற்றும் நொய்டாவில் உள்ள என் சகோதரர்களுடன், இந்தியாவை உலகின் முன்னணி இறால் ஏற்றுமதியாளராக மாற்றிய ஆந்திரப் பிரதேச இறால் விவசாயிகளுடன், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள நம் சகோதரர்களுடன் நான் துணை நிற்கிறேன்.
இது நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம். இந்தியர்களின் வாழ்வாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, முழு தேசமும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். பின்வரும் நடவடிக்கைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அவசர கால உதவி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் தவணைகளைச் செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். மேலும், ஒரு சிறப்பு அவசர கால கடன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
குறைந்த வட்டியில் மூலதனம்: ஏற்றுமதியாளர்கள் எளிதாகவும் குறைந்த செலவிலும் கடன் பெறுவதற்கு கடன் உத்தரவாதத்தை விரிவுபடுத்தி, குறைந்த வட்டியில் ஏற்றுமதிக் கடன்களை மீண்டும் வழங்க வேண்டும்.
செலவினங்களில் நிவாரணம்: ஏற்றுமதியாளர்களுக்கான தற்காலிக மின் கட்டணச் சலுகைகள், புதிய சந்தைகளுக்குச் செல்ல சரக்குக் கட்டணத்தில் ஆதரவு, மற்றும் செயற்கை நூல்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT