Last Updated : 28 Aug, 2025 01:52 PM

6  

Published : 28 Aug 2025 01:52 PM
Last Updated : 28 Aug 2025 01:52 PM

“திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை” - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ள பதிவை மேற்கோள் காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “அமித் ஷா முதல் பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பாஜக அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ.

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாக்கி இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்

முன்னதாக, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட பதிவில், “தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இந்திய அரசின் 2023–24 ஆம் ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில், தமிழகத்தில் 15.24% பேர் உள்ளனர். இது நாட்டின் 6 தொழிற்சாலை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட ஒருவர் ஆகும்.

40,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு மீண்டும் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது, இது தேசிய அளவிலான பங்கில் 15.43% ஆகும். எதிர்க்கட்சிகளால் அரசியல் ரீதியாக தூண்டப்படும் பொய்க்கும், அவர்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த மறுப்பு. இது எங்கள் தரவுகள் அல்ல, மத்திய அரசின் தரவுகள் ஆகும்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. மற்ற மாநிலங்கள் முதலீட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த திராவிட மாடல் அரசு வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு தொடர்ந்து திறமையின் தலைநகராகவும், இந்தியாவின் உற்பத்தித் தலைநகராகவும் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x