Published : 28 Aug 2025 12:53 PM
Last Updated : 28 Aug 2025 12:53 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் அளித்த புகாரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 8 பேர் மீது கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
அதே நாளில் விஜய்நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணிகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இரு வழக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயகுமார் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT