Last Updated : 27 Aug, 2025 09:27 PM

2  

Published : 27 Aug 2025 09:27 PM
Last Updated : 27 Aug 2025 09:27 PM

ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்

விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் ‘ரேம்ப் வாக்’ சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாப்பு கருதி, ‘ரேம்ப் வாக்’ மேடை அருகில் இருந்த தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டிருந்தது.

அதையும் மீறி தொண்டர்கள் சிலர் மேடையின் மீது ஏறியதால் விஜய்யின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அந்த வகையில் சில தொண்டர்களை விஜய்யின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் விஜய்யை அருகில் சென்று பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர்.

இந்த நிலையில் தவெக. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி.பாலமுருகனிடம் புகார் அளித்தனர். குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். அதில், “தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன். அப்போது என்னை நோக்கி தாக்கும் நோக்கத்தில் சுமார் 10 பவுன்சர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி ஓடி வந்தார்கள். அதில் ஒருவர் என்னை கீழே இறங்குமாறு அசிங்கமான வார்த்தையால் திட்டியும், மற்றொரு பவுன்சர் இடித்து தள்ளியும் தாக்கி கீழே வீசினார்.

தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சுப் பகுதி மற்றும் உடலில் உள்காயம் ஏற்பட்டது. உடலில் எனக்கு இன்னும் வலி அதிகமாக உள்ளது. தவெக பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினர். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்குக் கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன். தவெக தலைவர் விஜய்யின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பு நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன். எனவே தலைவர் விஜய் மீதும், அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ். 189(2), 296(b), 115(2) பி.என்.எஸ். பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்காக கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூடக்கோவில் போலீசாரிடம் கேட்டபோது,'விஜய் மீதான வழக்கு விவரம், ஆவணங்கள் வந்தவுடன் ஆய்வாளர் சாந்தி விசாரணையை தொடங்குவார்,, என்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x