Last Updated : 27 Aug, 2025 03:55 PM

 

Published : 27 Aug 2025 03:55 PM
Last Updated : 27 Aug 2025 03:55 PM

அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ

சென்னை: ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு (ஜனவரி 2025) அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை செய்ய முடியாத அளவில் உயர்த்தி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு தாக்குதல் நடத்தி வருகிறார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ஆயுதத் தாக்குதலை ஊக்குவித்து, ஈரான் மீது தாக்குதலை விரிவுபடுத்தி, மேலும், பல நாடுகளையும் மிரட்டி வரும் ட்ரம்ப் அரசு நிர்வாகம், மறு கையில் இறக்குமதி பொருள்கள் மீது கடுமையான வரி உயர்வு உத்தரவுகளை வெளியிட்டு மிரட்டி வருகின்றது.

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என தொடர்ந்து நிர்பந்தித்து வந்த அமெரிக்க அரசு, தற்போது, இன்று முதல் (27.08.2025) இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், ஏற்கனவே, அங்கு இறக்குமதி செய்து, குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விற்பனைக்காக வெளியில் எடுக்கப்பட்டாலும் அவை மீது 25 சதவீதம் கூடுதல் வரியும், அபராதமாக 25 சதவீதம் என 50 சதவீத வரி வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபாரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், மின்சார எந்திர சாதனங்கள் போன்ற உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கும் என தெரியவந்துள்ளது.

“இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார்கள் உலகம் முழுவதும் ஓடும்”எனப் பெருமிதப்படும் பிரதமரின் எண்ணம் அமெரிக்காவில் நடக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் சுய பொருளாதாரத்தை தாக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் “மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்” என்ற பிரதமரின் பேச்சு வழக்கமான வாய்ச்சவடாலாகி நின்று விடக்கூடாது. அதனை அரசியல் உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசின் வரிவிதிப்பால் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதிலும் கடுமையாக பாதிக்கும் என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு, இந்தப் பகுதி தொழில்களின் ஏற்றுமதி பாதிக்காமல் தொடர்ந்து நடைபெற, பொருத்தமான மாற்றுத் திட்டத்தையும், வரிச் சலுகைகள் உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x