Published : 27 Aug 2025 01:42 PM
Last Updated : 27 Aug 2025 01:42 PM

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துரிதமாக செயல்படவில்லை: கே.பாலபாரதி குற்றச்சாட்டு

மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன். உடன் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

மதுரை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பானதாக இருந்தாலும், இதை அரசு நிர்வாகம் துரிதமாகச் செயல்படுத்தவில்லை என ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி நேற்று தெரிவித்தார்.

மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை மற்றும் பட்டா குறித்த கணக் கெடுப்பு ஆய்வறிக்கை வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் ச.மகேஸ்வரி தலைமை வகித்தார். செயலர் நா.சரண்யா, பொருளாளர் அழகு ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசு 25 ஆண்டுகளுக்கு மேல் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைகளை வழங்கியுள்ளது. இதில் இதுவரை வீட்டுமனைக்கு பட்டா கிடைக்காமலும், பட்டா உள்ளவர்களுக்கு வீட்டு மனை இடம் கிடைக்காமலும் உள்ளனர். இது தொடர்பாக தமிழ் நாடு தொழிலாளர் உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட் டங்களில் கணக்கெடுப்பு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டனர்.

இதனை ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கா.பாலபாரதி, ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர் கே.பாலபாரதி கூறுகை யில், உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், நோக்கமும் சிறப்பானது, ஆனால் நிர்வாக அமைப்பு துரிதமாகச் செயல்படவில்லை. இத்திட்டத்தில் மனு அளித்தால் 45 நாட்கள் என கால அவகாசம் உள்ளதே தவிர, நிர்வாகம் செயல்படவில்லை. இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

தூய்மைப் பணியாளர்களான அருந்ததியர் வீடற்றவர்களாக, பட்டா இல்லாத வர்களாக உள்ளனர். தமிழக அரசு அருந்ததியர்களுக்கு முன் னுரிமை அளித்து புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். அருந்ததியர் அளிக்கும் மனுக்களுக்குக்கூட அதிகாரிகள் முறையாக பதில் தருவதில்லை, என்றார்.

பின்னர், கு.ஜக்கையன் கூறுகையில், அருந்ததியர் களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை இருக்கிறது; ஆனால் பட்டா இல்லை. பட்டா இருக்கிறது; வீட்டுமனை இல்லை. இதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களில் கடைக்கோடியாக உள்ள அருந்ததியர் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதால், இது தேர்தலில் எதிரொலிக்கும்.

அருந்ததியர்களுக்கு தனி முகாம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன். உடன் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x