Published : 27 Aug 2025 08:18 AM
Last Updated : 27 Aug 2025 08:18 AM
திருச்சி: பஞ்சப்பூரில் அமைச்சர் கே.என். நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதால்தான், அங்கு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியிருந்த நிலையில்,‘எனக்கு அங்கு 300 ஏக்கர் நிலம் இருந்தால், அதை பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: துறையூரில் ஆக.24-ம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது, நோயாளியை காப்பாற்றுவதற்காகவே தவிர, வேறு எந்த நோக்கத்துக்காகவும் அல்ல. துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு அதிமுகவினரே காரணம். அவர்களே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து தாக்கியதாக காவல் துறை தரப்பில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சப்பூர் பகுதியில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதால்தான், அங்கு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் கூறியிருப் பதைப்போல, அங்கு எனது பெயரிலோ, என்னைச் சார்ந்தவர்கள் பெயரிலோ நிலங்கள் இருந்தால், அதை அரசே கையகப்படுத்திக் கொள்ளலாம். நானே கையெழுத்திட்டு தருகிறேன். வேண்டுமென்றால் பழனிசாமியே அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அதிமுகவுக்குள்தான் பிரச்சினை: எங்களுடைய கட்சித் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நான் இணக்கமாகத்தான் உள்ளேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பழனிசாமிக்கும், தங்கமணிக்கும் இடையேதான் பிரச்சினை நிலவுவதாக அதிமுக நிர்வாகிகளே வெளிப்படையாக கூறி வருகின்றனர். தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு பணிகளும் சரியான முறையில் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT