Published : 27 Aug 2025 07:59 AM
Last Updated : 27 Aug 2025 07:59 AM
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.2,133.26 கோடி அரசு மானியத்துடன் ரூ.5490.80 கோடி கடன் வழங்கப்பட்டு 66,018 புதிய தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளதாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான இலக்கினை விரைவில் அடைய வேண்டும். மாற்றுத் திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும்.
கடந்த 2023-24-ம் ஆண்டு தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டதின்கீழ் இதுவரை 2,970 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மானியத்துடன் ரூ.581 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,452 பயனாளிகளுக்கு ரூ.13.45 கோடி மானியத்துடன் ரூ.64.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல் படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட ஆறு வகையான சுய வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 66,018 பயனாளிகளுக்கு ரூ.2133.26 கோடி மானியத்துடன் ரூ 5,490.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலீட்டு மானியம், மின் மானியம், ஊதிய பட்டியல் மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 20,702 நிறுவனங்களுக்கு ரூ.1,459.28 கோடி மானியமாக வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் துறை சார்பில் ரூ.63,573.11 கோடி முதலீடு செய்யும் வகையில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2,610 நிறுவனங்கள் ரூ.27,312.26 கோடி முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன்மூலம் 1,02,061 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து திட்டங்களிலும் இலக்கை எய்தும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் துறை செயலர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழக செயலர் ஆ.கார்த்திக், தொழில் ஆணையர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT