Published : 26 Aug 2025 07:06 PM
Last Updated : 26 Aug 2025 07:06 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 100 சிலைகள், பூஜை பொருட்களை இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினார்.
நாடு முழுவதும் நாளை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் பூஜை பொருட்கள் வழங்கி வருவது வழக்கம். அதன்படி நேற்று கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியில் மிலாடி நபி குழு தலைவர் அஸ்லம் தலைமையில் இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று ஒரு அடி விநாயகர் சிலைகள், ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம், கற்பூரம், ஊதுப்பத்தி, பூக்கள் அடங்கிய தட்டுக்கள் வழங்கினார்.
இதுகுறித்து மிலாடி நபி குழு தலைவர் கூறும்போது, 15 ஆண்டுகளாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியன்று பூஜை பொருட்கள் வழங்கி வருகிறோம். நிகழாண்டில் 100 வீடுகளுக்கு விநாயகர் சிலைகளுடன், பூஜை பொருட்கள் வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தோம், என்றார்.
இந்நிகழ்வில், பீர்தேஸ்கான், காரமத், ஜமீர், சமீயுல்லா, ரியாஸ், பப்லு, நயாஸ், இர்பான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், நகராட்சி கவுன்சிலரகள் வேலுமணி, ஜெயகுமார், சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT