Published : 26 Aug 2025 07:15 AM
Last Updated : 26 Aug 2025 07:15 AM
சென்னை: மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்கும் திட்டத்தை, ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி, தாங்கள் இருந்த இடத்திலிருந்து இச்சேவைகளை பெற முடியும்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி மக்களுக்கான சேவைகள் தற்போது நம்ம சென்னை செயலி, மாநகராட்சியின் இணையதளம் (www.chennaicorporation.gov.in), 1913 அழைப்பு மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேயர் ஆர்.பிரியா 2025-26-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்அப் வழியாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்அப்பில் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் மாளிகையில் நேற்று தொடங்கிவைத்தார். இதற்கான வாட்ஸ்அப் சாட்பாட் (Whatsapp Chatbot) சிறந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், நிபுணர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு, மக்கள் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாநகராட்சியின் சேவையை தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 எனும் வாட்ஸ்அப் எண்ணை தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, இந்த வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு ‘Hi’ அல்லது ‘வணக்கம்’ என பதிவிட வேண்டும். பின்னர், மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டலுடன் உள் நுழைந்து பெற்றிட வேண்டும்.
இதில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாயக்கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல்குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கடை வாடகை செலுத்துதல், கட்டிடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலுமின்றி தாங்கள் இருந்த இடத்திலிருந்து பெற முடியும்.
இதில், தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட முடியும். இந்த வாட்ஸ்அப் எண்ணில், மண்டல அலுவலகம், வார்டு அலுவலகம் கண்டறிதல், அருகில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொள்ளுதல், பள்ளிக் கூடங்கள், கழிப்பிடங்கள், பேருந்து நிறுத்துமிடங்கள், அம்மா உணவகம், மயான பூமி, சமுதாயக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார மையம், படிவங்கள் பதிவிறக்கம் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும்.
விரைவில் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பதிவுத் துறை சேவைகளும் வழங்கப்படும். மேலும், பல்வேறு சேவைகளை எளிதில் பெற கியூஆர் கோடு-ஐயும் மேயர் பிரியா வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் (வரிவிதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயாதாஸ் நரேந்திரன், துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, ம.பிரதிவிராஜ், மாநகர வருவாய் அலுவலர் கே.பி.பானுசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT