Published : 26 Aug 2025 09:57 AM
Last Updated : 26 Aug 2025 09:57 AM
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு இரவில் திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், நந்தனம் தனியார் மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு. கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். மேலும் 100 வயதாகியுள்ள அவருக்கு வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சினைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதயம் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் கோளாறால் நேற்று முன்தினம் இரவு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருந்ததை விட, தற்போது நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் மருத்துவமனையில் தங்கி நல்லகண்ணுவை கவனித்து வருகின்றனர்.
நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனைக்கு வந்து நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். அதேபோல் தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் செல்போனில் நல்லகண்ணுவின் பேரனை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT