Published : 25 Aug 2025 08:59 PM
Last Updated : 25 Aug 2025 08:59 PM
மதுரை: திருச்சி அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் "மக்களை காப்போம்" பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற நோயாளியை அழைத்துக்கொண்டு கூட்டம் நடந்த இடத்தைக் கடந்தார்.
அப்போது பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆகஸ்ட் 24ம் தேதி அன்று திருச்சி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தபோது அங்கிருந்த அதிமுகவினர் ஓட்டுநரைத் தாக்கி 108 ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இதனால் 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே, 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்கு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT