Published : 25 Aug 2025 08:17 PM
Last Updated : 25 Aug 2025 08:17 PM

மதுரை: பெண்ணின் இதயம் வரை குத்தியிருந்த ஊசியை பாதுகாப்பாக அகற்றிய மருத்துவர்கள்!

மதுரை: பெண்ணின் நெஞ்சில் குத்தி இதயம் வரை சென்ற ஊசியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி வெற்றிகரமாக அகற்றினர். மருத்துவக் குழுவினரை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகாவுக்குட்பட்ட மீனம்பநல்லூரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (30). இவர் கடந்த 18-ம் தேதி தன்னுடைய வீட்டில் உள்ள பரணியிலிருந்து பொருட்களை எடுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில், தரையில் கிடந்த ஊசி ஒன்று புவனேஷ்வரி நெஞ்சில் குத்தியது. வலியால் துடித்த அவர், அதற்கான முறையான மருத்துவ சிகிச்சைப் பெறாததால், 2 நாட்கள் கழித்து அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

பதற்றமடைந்த உறவினர்கள், கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, சிடி ஸ்கேன் செய்து மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் நெஞ்சில் குத்திய ஊசி இதயம் வரை சென்றிருந்தது கண்டறியப்பட்டது. அபாய நிலையில் இருந்த அவரை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு மருத்துவர்கள் எக்கோ, ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது இதயத்தை சுற்றி நீர்க்கட்டு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அன்று இரவே அறுவை சிகிச்சை மூலம் ஊசியை வெற்றிகரமாக அகற்றி, புவனேஷ்வரியை காப்பாற்றினர். அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது எந்த பக்கவிளைவும் இன்றி நோயாளி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால், அவரை ஒரிரு நாளில் வீட்டுக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்னர். இதையடுத்து, பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை, மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x