Published : 25 Aug 2025 06:49 PM
Last Updated : 25 Aug 2025 06:49 PM
திண்டுக்கல்: ‘தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு யாரும் முதல்வர் ஆக முடியாது’ என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. தமமுகவுடன் பயணிக்கும் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிதான்.
தவெக மாநாட்டை வைத்து எதுவும் சொல்ல முடியாது. பிரதமர் மோடியை விமர்சித்து விஜய் பேசியது அவரிடம் அரசியல் நாகரிகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருவரை விமர்சனம் செய்வதால் நாம் வளர்வோம் என்பது குறுகிய மனப்பான்மை. யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் படித்துவிட்டு சென்றுவிட்டார். தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு முதலமைச்சர் ஆவது என்பது நடக்காத ஒன்று.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. பாலியல் தொல்லைகள், சாதியப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. மாணவர்களிடையே மது, கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. திருமாவளவன் தமிழரா என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது. தமிழருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுக்கலாம் என்றால் அதனை வாழ்த்த வேண்டுமே தவிர அரசியலுக்காக வேஷம் போடக்கூடாது.
சி.பி.ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விடுவதாக அவரே குற்றம்சாட்டியுள்ளார். இடையூறு செய்தால் கோபம் வரத்தான் செய்யும். அவர் போகும் இடமெல்லாம் விபத்து நடக்குமா? 30 முறை இதுபோல் இடையூறு செய்துள்ளனர். ராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு முதல்வர் ஏன் அனுமதி கொடுத்தார்? பின் ஏன் அனுமதி மறுத்தார் என்பது தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT