Published : 25 Aug 2025 05:25 PM
Last Updated : 25 Aug 2025 05:25 PM
சென்னை: மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்து முன்னணி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியத் தலைவர் பெருமான் தேச விடுதலைக்காக வேண்டி வீட்டுக்குள் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை வீதியில் பொதுவிழாவாக, மக்கள் விழாவாக கொண்டாட வைத்தார். தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இந்து சமுதாய ஒற்றுமை மற்றும் இந்து எழுச்சிக்காக மக்கள் விழாவாக இந்து முன்னணி பேரியக்கம் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறது.
1983-ல் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு அடியில் ஒரு விநாயகரை வைத்து துவக்கிய விநாயகர் சதுர்த்தி இந்து மக்கள் எழுச்சி விழா இன்று தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு விஸ்வரூப விழாவாக நடைபெறவுள்ளது.
விநாயகர் என்றாலே சுப ஆரம்பம் என்பது நமது நம்பிக்கை. அதனால் பிள்ளையார் சுழி போட்டு எழுத்தைத் துவங்கிறோம். எந்த தடங்கலும் இல்லாமல் எடுத்த காரியம் நிறைவேற முதலில் வழிபடும் தெய்வம் விநாயகர். விநாயகர் அருளால் முத்தமிழால் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ் பாட்டி அவ்வையார். தமிழகம் முழுவதும் இருப்பவர் விநாயகர்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் இந்து முன்னணி. இந்த ஆண்டு "நம்ம சாமி நம்ம கோயில் நாமே பாதுகாப்போம்" என்ற கருத்தினை வலியுறுத்துகிறது. இதன் மூலம் திருக்கோயிலை அப்பகுதி மக்கள் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டப்படும்.
எப்போதும் நமக்கு துணையாக நின்று அருளும் எளிய தெய்வம் விநாயகரை வழிபட்டு எல்லா நலன்களும் வளங்களும் பெறுவோம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT