Published : 25 Aug 2025 06:29 AM
Last Updated : 25 Aug 2025 06:29 AM
சென்னை: எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தேசியளவில் பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கென பிரத்யேக மாநிலக் கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமத்துவமான, குழந்தைகளை எதிர்காலத்துக்கு தயார்ப்படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான திட்ட வரைவை அடிப்படையாக கொண்டுள்ளது.
கரோனா கால கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 2021-22-ம் கல்வியாண்டு முதல் ரூ.660.35 கோடி ஒதுக்கீடு செய்து 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024–25-ம் கல்வியாண்டு முதல் 17.53 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளிடம் அடிப்படைக் கல்வியறிவு, எண்ணறிவை மேம்படுத்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களை அடையாளம் கண்டு சிறப்புக் கல்வி வழங்க நலம் நாடி செயலி பயன்படுத்தப்படுகிறது. பள்ளியிலேயே 76 லட்சத்து 56,074 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28,067 அரசுப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையவசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர அரசுப் பள்ளிகளில் பயிலும் 16 லட்சத்து 77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கப்பட்டுள்ளன. 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடியில் கையடக்கக் கணினிகள் (Tablet) தரப்பட்டுள்ளன. 11, 12-ம் வகுப்புக்கான தொழிற்கல்விப் பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் (வானவில் மன்றம்) ரூ.11.69 கோடியில் 33.50 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டுகளில் 614 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.1087.76 கோடியும், 2,455 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு, வகுப்பறைக் கட்டங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர 2024–25-ல் 440 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.745 கோடியும், பராமரிப்பு பணிக்கு ரூ.200 கோடியும் 526 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.284 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது 2025-26-ம் கல்வியாண்டில் 567 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.734.55 கோடியும் பராமரிப்பு பணிகளுக்கென ரூ.200 கோடியும் 182 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.110.71 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்காரணங்களால் சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில் தேசியளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT