Published : 25 Aug 2025 06:03 AM
Last Updated : 25 Aug 2025 06:03 AM
சென்னை: அரசியல் கட்சி தொடங்கிவிட்டோம் என்பதற்காக விஜய் கடந்த காலத்தை மறந்துவிட்டு முதல்வரை மரியாதை குறைவாக பேசுவது சரியல்ல என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அறிவுசார்ந்துதான் தமிழ் மொழியை திமுக உயர்த்தி பிடிக்க நினைக்கிறது. ஆனால், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தமிழ் 2,000 ஆண்டுகள் பழமையானது. சமஸ்கிருதம் போன்ற மொழிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை எனக்கூறி நமது வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழினம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியுள்ளது. ஆனால் அதை மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால், தமிழின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து புத்தகம் மற்றும் தமிழ்மொழி மீது ஆர்வமுள்ளவர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் மரியாதை இல்லாமல் பேசியது தவறு. கருணாநிதியின் குடும்பத்துடன் விஜய் குடும்பம் நெருக்கமான உறவு கொண்டவர்கள். உதயநிதியின் நல்ல நண்பனாக இருந்தவர். ஆனால், தற்போது ஒரு அரசியல் கட்சி தொடங்கிவிட்டோம் என்பதற்காக அனைத்தையும் மறந்துவிட்டு பேசுவது சரியல்ல. அதேபோல், திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து கூறியுள்ளார்.
அமித் ஷாவுக்கு தமிழகத்தின் அரசியல் பற்றி தெரியவில்லை. 75 ஆண்டுகள் பழமையான கட்சி திமுக. 4 தலைமுறைகளையும் சேர்ந்த தொண்டர்கள் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அரசியல் சிந்தனை தெளிவானவை. மேலும் திமுக கல்வி, சமூகநீதியுடன் சேர்ந்து வளர்ந்த அரசியல்கட்சி. அவ்வளவு எளிதில் அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT