Published : 25 Aug 2025 12:59 AM
Last Updated : 25 Aug 2025 12:59 AM
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி தமிழகம் வந்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி சார்பில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரும் விதமாக சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்றார். இதை தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சுதர்சன் ரெட்டியை அறிமுகம் செய்து வைத்து, ஸ்டாலின் பேசியதாவது: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, தமிழகத்துக்கும், தமிழக உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர். ஆனால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான அவரை நக்சல் ஆதரவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் விமர்சிக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த திறனற்ற நிலையை மறைக்க, நீதிபதிமேல் பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்.
அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது. தன்னாட்சி அமைப்புகளை பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றி வருகிறது. அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் அடிப்படை கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி,வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிப்பதுதான் நம் முன்னால் இருக்கும் கடமை. ஆனால், பாஜகவோ, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே அனைத்து செயல்களையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்கிறது. இதெல்லாம் பழைய தந்திரம்.
எனவே, சட்ட நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதர்சன்ரெட்டி நமது இந்திய ஜனநாயகம், நாடாளுமன்ற மரபுகள், மக்களாட்சி, அரசியலமைப்பு ஆகியவற்றை காக்க குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்று வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பின்னர், ஆதரவு கோரி சுதர்சன் ரெட்டி பேசியதாவது: திராவிட இயக்க பாரம்பரியம் செழித்த தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட சிறந்த ஆளுமைகள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வழியில் மாநில உரிமைக்காக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார். விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி, சுகாதாரம், புத்தாக்க சிந்தனை, தொலைநோக்கு பார்வையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியா என்பது ஒரு நாடுதான். ஆனால், மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. நீதிபதியாக இருந்தபோது அரசியலமைப்பை நிலைநிறுத்திக் கொண்டிருந்தேன். இப்போது, அரசியலமைப்பை காக்க குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். நான் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு சட்டத்தை முழுமூச்சுடன் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுதர்சன் ரெட்டி, ‘‘தமிழகத்தை சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோரைப் போல நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு போட்டியிடுகிறேன். அனைத்து கட்சி எம்.பி.க்களிடமும் ஆதரவு கோருவேன்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ், திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, கர்நாடக காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT