Published : 24 Aug 2025 05:08 PM
Last Updated : 24 Aug 2025 05:08 PM
சென்னை: மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி, ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
குறிப்பாக திறந்தவெளி அனுமதி அடிப்படையில் 10-வது சுற்று ஏல அறிவிப்பில் ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வேதாந்தா, ஓஎன்ஜிசி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த பகுதிகளை மத்திய அரசு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
எனவே மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி, ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT