Published : 24 Aug 2025 04:40 PM
Last Updated : 24 Aug 2025 04:40 PM
கிருஷ்ணகிரி: தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, அக்கட்சியின் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் இன்று (24ம் தேதி) திமுக வர்த்தக அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நிர்வாகிகளை மாநில துணை செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் வரவேற்றார். மேலும், மாநில செயலாளர் கவிஞர்.காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அன்பரசன் நிர்வாகிளை வரவேற்றார்.
மேலும், கூட்டத்தில், தாயுமானவர் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு. தவெக மதுரை மாநாட்டில், முதல்வர் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, அக்கட்சி தலைவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில வர்த்தகர் அணியின் செயலாளர் காசி முத்து மாணிக்கம் கூறியதாவது: ”மதுரையில் நடைபெற்ற தவெக மாநாடு சினிமா படப் பிடிப்பு போல் நடந்துள்ளது. தமிழக முதல்வரை, தவெக தலைவர் விஜய் மிகவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இது கண்டனத்திற்குரியது. இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், கட்சியில் மூத்த நிர்வாகிகள் யாரும் இன்றி கட்சி ஆரம்பித்த உடனே முதல்வராக வேண்டும் என கனவில் இருக்கும் விஜய்-க்கு வருகிற தேர்தலில் பொதுமக்கள் மரண அடி கொடுப்பார்கள்.
அதன் பிறகு நாட்டில் எந்த நடிகரும் முதல்வர் கனவுடன் அரசியலுக்கு வர மாட்டார்கள். பிரதமர் மோடி வருகின்ற தீபாவளி அன்று சிறு, குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி-யில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி-யை முழுமையாக நீக்கும் நாள் தான் வியாபாரிகள், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். மேலும், அரசியலமைப்பு 130 வது திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாநில வர்த்தகர் அணி நிர்வாகிகள் பழஞ்சூர் செல்வம், மோகன், மாலை ராஜா, ஜெயன், கோவை முருகவேல், பாண்டிச்செல்வம், முத்து செல்வி, தாமரை பாரதி, வி.பி.மணி, தனசெல்வம், பல்லவி ராஜா, ராமகிருஷ்ணன், தர்மசெல்வன், சத்தியமூர்த்தி உட்பட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT