Last Updated : 24 Aug, 2025 12:21 PM

 

Published : 24 Aug 2025 12:21 PM
Last Updated : 24 Aug 2025 12:21 PM

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, மாணவக் குழந்தைகளுடன் அமர்ந்து, சாப்பிட்டு மகிழ்ந்தேன். பிள்ளைகளின் வயிறு நிறைந்தது. எனக்கு மனது நிறைந்தது.

இந்தத் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் பசியுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்பதுதான். மதிய உணவு நேரம் வரை அவர்கள் சத்துணவுக்காகக் காத்திருக்காமல், காலையிலேயே சத்தான உணவைச் சாப்பிட்டு, பாடங்களைக் கற்று, மதியம் சத்துணவு சாப்பிடச் செல்ல வேண்டும் என்பதும், இதன் மூலமாக, ஊட்டச்சத்து குறைபாடின்றி அவர்கள் ஆரோக்கியமாக வளரவும், அவர்களின் வருகை தடைபடாமல் இருக்கவும் செய்வதுடன், அந்தக் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைப்பதும் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோளாக அமைந்தது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1545 தொடக்கப் பள்ளிகளில் 1,14,095 குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளும் பயன்களும் எப்படி இருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். குழந்தைகளுக்கு என்ன வகையான ஊட்டச்சத்துகள் தேவை, அவர்கள் என்ன விதமான உணவை விரும்புகிறார்கள். சத்தும் ருசியும் கலந்த உணவு வழங்கப்படுகிறதா என்கிற ஆய்வுகளை மேற்கொண்டு, காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

தாய்மார்கள் தங்கள் பணிச்சுமை குறைந்த மகிழ்ச்சியுடன் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு அனுப்புவதையும் அறிந்துகொண்டேன். அடுத்த கட்டமாக, 2023-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாளன்று மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 433 அரசு தொடக்கப் பள்ளிகளில் 56 ஆயிரத்து 160 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவடையச் செய்தால், அங்கு பயிலும் எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தினை கவனத்துடன் பரிசீலித்தது மக்களின் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுத் தொடங்கி வைத்த விழாவின் மூலமாக ஊரகப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். தற்போது மொத்தமாக, 34 ஆயிரத்து 987 தொடக்கப் பள்ளிகளில், 17 லட்சத்து 53 ஆயிரம் மாணாக்கர்கள் சத்தான காலை உணவுடன், தெம்பாகக் கல்வி கற்று வருகிறார்கள்.

வீட்டுச் சூழலால் கிடைக்காமல் போன காலை உணவு, பள்ளிக்கு வந்ததும் சூடாகவும் சுவையாகவும் கிடைப்பதால் மாணவர்கள் அதனை ஆர்வத்துடன் சாப்பிடுவதுடன், சக மாணாக்கர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது ஏற்படும் உணர்வும் இணைந்து அவர்களை வகுப்பறையில் உற்சாகமாக இருக்கச் செய்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பள்ளியில் காலை உணவு கிடைத்துவிடும் என்பதால் நிம்மதி அடைவதுடன் தங்களுடைய வேலைப் பளு குறைந்திருப்பதையும், பிள்ளைகளின் கற்றல் திறன் மேம்பட்டிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

நாளைய தலைமுறையின் இன்றைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு தாயுள்ளத்துடன் செயல்படும் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் இதனைப் பின்பற்றுவதற்கான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதும், இங்கிலாந்து-கனடா-இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காலை உணவுத் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டிருப்பதும், உலகக் கண்ணோட்டத்துடன் தமிழ்நாடு செயல்படுவதை உறுதி செய்கிறது.

வருகிற 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தினை பஞ்சாப் மாநில முதலமைச்சருமான பகவந்த் மான் முன்னிலையில் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இதற்கான அழைப்பிதழை கழக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பகவந்த் மானிடம் நேரில் கொடுத்து, எனது சார்பில் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விரிவாக்கத்தின் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2 ஆயிரத்து 429 பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 6 ஆயிரம் மாணவ-மாணவியர் பயன் பெறுவர்.

நாள்தோறும் திட்டங்கள், நலிவுற்றோர் ஏற்றம் காணும் செயல்பாடுகள், தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதனிடையெ தனது எக்ஸ் பக்கத்தில், "காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள். நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்.

வரும் 26 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும். தமிழ்நாடு நாளும் உயரும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x