Published : 24 Aug 2025 10:50 AM
Last Updated : 24 Aug 2025 10:50 AM
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில், தங்களது பெற்றோரை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் வகையில், இடை நிற்றலின்றி அவர்கள் கல்வியைத் தொடர 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிப் படிப்பு மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது. திட்டத்தில் சேர்வதற்கான தகுதியுடைய குழந்தைகளின் உறவினர்கள், குடும்ப அட்டை நகல், குழந்தையின் ஆதார் நகல், பிறப்பு சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், அவரவர் பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT