Published : 24 Aug 2025 12:36 AM
Last Updated : 24 Aug 2025 12:36 AM
திருச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது, விலை கட்டுப்பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்கி, குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்குக்கொடுத்தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை.
கர்நாடக காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஆக. 30-ல் ஓய்வுபெறுகிறார். ஆனால், அடுத்த டிஜிபிக்கான பெயர்ப் பட்டியலை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனத்து வரிகளையும் 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்திவிட்டனர்.
மேலும், 4 ஆண்டுகளில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். கடன் வாங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம் திருமண உதவித் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை, மணமகனுக்கு பட்டு வேஷ்டி வழங்கப்படும். எனவே, வரும் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT