Published : 24 Aug 2025 12:34 AM
Last Updated : 24 Aug 2025 12:34 AM
மதுரை: குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் குடியிருப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில், வீடுகளில் சேரும் குப்பையை மட்டும் கொட்ட வேண்டும். தனியார் மற்றும் அரசுமருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் தரம் பிரித்து, அவர்களிடம் வந்து சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், கடந்த காலத்தில் வைகை ஆறு, கால்வாய்களில் மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் கொட்டினர். ஆணையர் சித்ரா அதிரடி நடவடிக்கை எடுத்து, தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகு, ஓரளவு இதுபோன்று மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி 35-வது வார்டில் உள்ள செண்பகத் தோட்டம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து அப்பகுதி சுகாதார ஆய்வாளர், மாநகராட்சி நகர் நல அலுவலர் இந்திராவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை மேற்கொண்டு,சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டறிந்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT