Published : 24 Aug 2025 12:14 AM
Last Updated : 24 Aug 2025 12:14 AM
சென்னை: மதுரை மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: மதுரையில் நடந்த 2-வது மாநில மாநாட்டின் வெற்றி என்பது உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் என்பதை உணர்ந்து,மாநாட்டுப் பணிகளை சிறப்புடன் மேற்கொண்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். மற்றவற்றை புறந்தள்ளிப் புன்னகைப்போம். மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்கள் அரசியல் மட்டுமே, நமது நிரந்தர அரசியல் நிலைப்பாடு. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு.
1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டப் போவது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT