Published : 23 Aug 2025 12:05 PM
Last Updated : 23 Aug 2025 12:05 PM
சென்னை: மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஒன்றிய அரசு குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறது ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது .
தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது. . மாநில உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒன்றிய அரசு அதிகார குவிப்பாக இருக்கிறது, பகிர்வாக இல்லை. நிதி பற்றாக்குறை காலத்தில் கூட வளர்ச்சி குறியீடு இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது.
அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாங்கமாக திமுக உள்ளது. வரிகளில் அதிக வருமானம் ஈட்டி கொடுக்கும் மாநிலமாக தமிழக அரசு இருக்கிறது. மத்திய அரசு தரும் நிதி மாநில வரி வருமானத்துக்கு ஏற்றவாறு இல்லாமல் குறைவாக உள்ளது. பல்வேறு நெருக்கடிகளிலும் போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம். தமிழ்நாட்டில் எழுந்த மாநில சுயாட்சி என்ற முழக்கம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. தமிழகத்தில் எழுந்த முழக்கம் நாடு முழுவதும் பரவியது .
சட்டக் குறுக்கீடுகள், நிர்வாக குறுக்கீடுகள் வழியாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை தரும் வகையில், பல தடைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய நியாயமான நிதி பங்கீட்டையும் மறுக்கிறது.
இந்தியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாடு பல்வேறு போராட்டங்களை நடத்தி அதை முறியடித்து இருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் போராடி கட்டாய இந்தி திணிப்பை தடுத்திருக்கிறார்கள். அதனால் தான் 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா இரு மொழி கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT