Published : 23 Aug 2025 06:08 AM
Last Updated : 23 Aug 2025 06:08 AM
சென்னை: கடுமையான முகச்சிதைவு எதுவு மில்லாமல் 64 வயதான மூதாட்டியின் வாயிலிருந்து பெரிய கட்டியை சிக்கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண் மித்ரா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தா குமாரி (64) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சாப்பிடும் போது உணவை விழுங்கும் போது அசவுகரியமாகவும், தூங்கும் போது குறட்டை அதிகரித்து வந்ததாலும் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவரைச் சந்தித்தபோது, அவரது வாயின் மேல் தாடையில் பெரிய கட்டி இருப்பது குறித்து தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு 5 - 6 செ.மீ. அளவுள்ள, கிட்டத்தட்ட ஒரு டென்னிஸ் பந்தின் அளவில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பி கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இது வழக்கத்தை விட பெரிய அளவிலான கட்டியாக இருந்தது. இதை திறந்த அறுவை சிகிச்சை முறை அல்லது சிக்கலான டிரான் சோரால் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். வழக்கமான திறந்த அறுவை சிகிச்சை முறையில் அக்கட்டியை அகற்றும்போது கீழ் தாடையை உடைத்துத்தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அப்போது சுவாசத்துக்காக தொண்டையில் குழாய் வைக்கப்படும்.
இதுதவிர பிளேட், ஸ்க்ரூ போன்றவைகளும் தாடையில் வைக்கப்படும். இதனால் ஏற்படும் காயம் ஆற 2 முதல் 3 வாரங்கள் எடுத்துக்கொள்ளும். வலியும் அதிகமாக இருக்கும். 10 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கும். காயங்கள் ஆறினாலும் முகச்சிதைவு மறையாமலே இருக்கும். எனவே இதற்கு பதிலாக டிரான்சோரால் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை மேற்கொள்ள திட்டமிட்டோம். அதன்படி நோயாளியின் வாயில் வெறும் 8 மி.மீ அளவுகொண்ட 3 ஸ்ட்ரா போன்ற ரோபோடிக் கைகளை உள்நுழைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
3 நாளில் வீடு திரும்பினார்: இந்த ரோபோடிக் கைகள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் திறன் பெற்றது என்பதால், எளிதாக திட்டமிட்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து டென்னிஸ் பந்து அளவுகொண்ட அந்த பெரிய கட்டியை அகற்றினோம். இச்சிகிச்சை முறையில் நோயாளிக்கு வலி எதுவும் ஏற்படவில்லை.
முகச்சிதைவும் உண்டாகவில்லை. கேமரா மூலம் நுட்பமாக அறுவை சிகிச்சையைக் கையாண்டதால் சுவை நரம்புகளில் கூட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களில் நோயாளி உணவு உட்கொள்ள ஆரம்பித்துவிட்டார். 3-ம் நாட்களில் வீடு திரும்பினார். தற்போது நோயாளி நலமுடன் இருக்கிறார். இச்சிகிச்சை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT