Published : 23 Aug 2025 06:01 AM
Last Updated : 23 Aug 2025 06:01 AM
சென்னை: சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள விளையாட்டு மேம்பாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் புதிய விளையாட்டு விடுதி, கோவை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் புதுப்பிக்கப்படும் என நடப்பாண்டு (2025-26) பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி ரூ.3 கோடியில் 90 மாணவர்கள் தங்கி குத்துச்சண்டை பயிற்சி பெறும் வகையில் புதிய விளையாட்டு விடுதி, உணவருந்தும் கூடம், சமையலறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
சிறு விளையாட்டரங்கம்: கோவை மாவட்டத்தில், நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் ரூ.4.89 கோடியில் புனரமைத்து, புதுப்பிக்கப்பட உள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் 200 மீ. தடகளப் பாதை, கையுந்து பந்து, கபாடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் ஆகிய விளையாட்டு வசதிகள் மற்றும் நுழைவு வாயில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், கழிப்பறை வசதி ஆகியவற்றுடன் ரூ.3 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது.
அந்த வகையில், சென்னை, கோவை, கன்னியாகுமரியில் மொத்தம் ரூ.10.89 கோடியில் விளையாட்டுத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு மேம்பாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் தயாநிதி மாறன் எம்.பி, நா.எழிலன் எம்எல்ஏ, விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT