Published : 23 Aug 2025 05:58 AM
Last Updated : 23 Aug 2025 05:58 AM
சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு நாகரிகமான மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கால் - கை வலிப்பு சங்கம் (எபிலிப்சி) சார்பில் கால் - கை வலிப்பு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்த ‘இகான் - 2025’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தை மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி நேற்று மாலை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார்.
சங்கத்தின் தலைவர் பி.சதீஷ் சந்திரா, பொதுச்செயலாளர் பிந்து மேனன், இந்திய கால் - கை வலிப்பு சொசைட்டி தலைவர் சரத் சந்திரா, பொதுச்செயலாளர் விநயன், இகான் 2025 அமைப்பின் தலைவர் நடராஜன், செயலாளர் மால்கம் ஜெயராஜ் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நோய்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கத்தில் கால் - கை வலிப்பு கண்டறிதல், சிகிச்சை மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் சமீபத்திய முன்னேற்றங்களை மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது: கடந்த 1958-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் பேசும்போது, “ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவருக்கு மனநலம் சரியில்லை என கண்டறியப்பட்டால், அவர் தூக்கிலிடப்படமாட்டார்” என்று பேசினார்.
அப்போது மாநிலங்களவை தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, “நல்ல மனநிலையே அசாதாரணமானது. மனநல பாதிப்புக்கு பல நிலைகள் உள்ளன. நாம் அனைவரும் அதில் ஒரு வகையான பாதிப்புக்கு உள்ளானவர்களே” என்றார்.
வலிப்பு நோய் என்பது கடுமையானதாக பார்க்கப்பட்டாலும், அது குணப்படுத்த கூடிய ஒன்று தான். இதுதான் இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும். ஆனாலும் அதையும் தாண்டி அனைவர் மனதிலும் இருப்பது மனநல பாதிப்புகளால், பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களாகும்.
நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் மனநல பாதிப்பின் காரணங்கள், விளைவுகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறோம். அவை கட்டுப்பாட்டை மீறி செல்கின்றன. இவற்றை மருந்துகள் மூலமாக மட்டுமே குணப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நமது மனநலம் சில சூழ்நிலைகளில் பணிவாகவும், சில சூழ்நிலைகளில் வலிப்புத்தாக்கங்களை போல திடீரென வியத்தகு முறையிலும் இருக்கலாம். நமக்கு இதிகாசங்களையும் பல நூல்களையும் வழங்கிய நம்முடைய மொழிகள், உடல் நல குறைபாடுகளை போலன்றி, மனநல குறைபாடுகளுக்கு வெட்கக்கேடான சொல்லை உருவாக்க தவறவில்லை. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதற்கு முழு அகராதியே உள்ளது.
இதுவே ஒரு மனநல பாதிப்பை கையாளுவதையும், சிகிச்சை அளிப்பதையும் கடினமாக்குகிறது. தொழு நோயாளி என்ற சொல் இப்போதும் நாகரீகமாக கருதப்படவில்லை. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தான் அழைக்கப்படுகிறார்கள். அதேபோல் வலிப்பு நோயை, காக்கா வலிப்பு என அவமானகரமான சொல்லால் அழைக்கிறார்கள். இதுபோன்ற சொற்களுக்கு நாகரிகமான மாற்று சொற்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT