Last Updated : 22 Aug, 2025 07:52 PM

5  

Published : 22 Aug 2025 07:52 PM
Last Updated : 22 Aug 2025 07:52 PM

“திமுக ஊழலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவுகட்டும்” - நெல்லையில் அமித் ஷா பேச்சு

நெல்லை: “நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால், அது திமுக ஆட்சிதான். அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது இதற்கு முடிவு கட்டப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “புண்ணிய பூமியான தமிழகத்தில் உங்கள் மத்தியில் தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

தமிழ் மண் சரித்திரம், வீரம், பண்பாடு, கலாசாரம் மிகுந்தது. இந்த மண்ணை வணங்குகிறேன். நாகாலாந்து மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றிய இல.கணேசன் மறைந்துவிட்டார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் பாஜகவுக்காக அர்ப்பணித்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரது ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னிறுத்தி பெருமையடையச் செய்துள்ள பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களவை மீண்டும் தொடங்கும்போது குடியரசு துணை தலைவர்தான் மாநிலங்களவையின் தலைவராக செயல்படுவார். அவர், இந்த தமிழ் மண்ணை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்.

தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவ உத்தரவிட்டுள்ளதோடு, கங்கை நீரால் பிரதீஸ்வரரர் சுவாமிக்கு மீண்டும் அபிஷேகம் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம் ஆகியவை மூலம் தமிழுக்கும் மேலும் பெருமை சேர்த்து வருகிறார். திருவள்ளுவரின் திருக்குறள் நூலை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்க காரணமாக இருந்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொன்றனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுக்கு மோடி தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். பயங்கரவாதத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. அருமையான குடிமக்கள், வலிமையான சேனை என்றெல்லாம் நல்லாட்சிக்கான நான்கு வழிகளை திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த திருக்குறள் வழி நின்று மோடி ஆட்சி செய்து வருகிறார்.

பிரதமர், முதல்வர் ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்று, 30 நாட்களுக்கு மேலிருந்தால் அவர்களது பதவி பறிபோகும் புதிய மசோதா மக்களவையில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்துள்ளனர். சிறையில் இருந்தவர்கள் ஆட்சியாளர்களாக தொடர முடியுமா, சிறையில் இருந்துகொண்டே ஆட்சி நடத்த முடியுமா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசின் இந்த புதிய மசோதா, கருப்புச் சட்டம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவ்வாறு சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை. நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால், அது திமுக ஆட்சிதான். இங்கு ஏராளமான ஊழல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து துறை ஊழல், இலவச வேட்டி - சேலையில் ஊழல், வேலைவாய்ப்பு வழங்குவதில் ஊழல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது இதற்கு முடிவுகட்டப்படும்.

திமுகவும், காங்கிரஸும் தங்களது வாரிசுகளை அரியணையில் அமர்த்த துடிக்கிறார்கள். ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும், சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்கவும் கனவு காண்கிறார்கள். அந்த கனவு ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் திமுக கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்.

7980-க்கும் மேற்பட்ட பூத்களில் இருந்து 25,000-க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். கடந்த தேர்தலில் பாஜக 18 சதவீதமும், அதிமுக 21 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. அவை இரண்டும் சேர்ந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழகத்தை வளர்ச்சி, முன்னேற்றம் அடைய செய்யும் கூட்டணி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

போட்டியிடும் எல்லா இடத்திலேயே பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு பூத் கமிட்டி உறுப்பினர்களே முக்கிய காரணம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இங்கு வந்துள்ள நிர்வாகிகள் அனைவரும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த திட்டங்களை பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும்.

தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்க வேண்டும். நம் கூட்டணியில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்காகவும் உழைக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட உள்ளது. ரூ. 1 லட்சம் கோடி திட்ட முதலீட்டில் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு, முன்னேற்ற திட்டங்களும், நாட்டின் அனைத்து பகுதிகளும் பாரபட்சமற்ற வகையில் முன்னேறும் வகையிலான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இதை மக்களிடம் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு பூத்திலும் வெற்றிக்கான மாற்றத்தை உருவாக்கி மோடியை வெற்றியாளராக கொண்டாடச் செய்ய வேண்டியது பூத் கமிட்டி நிர்வாகிகளின் பொறுப்பாகும். எனவே, இதை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்” என்று அமித் ஷா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x