Published : 22 Aug 2025 06:17 PM
Last Updated : 22 Aug 2025 06:17 PM
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் விஜய். கட்சியை ஆரம்பித்த 18 மாதங்களில் 2-வது மாநில மாநாடு என்பது கவனிக்கத்தக்கதுதான். மாநாடு பற்றியும், அதில் விஜய்யின் 45 நிமிட உரை பற்றியும், ‘மாஸ் கூட்டம், தெறி ஸ்பீச்’ என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள், தவெகவின் தொண்டர்கள். ஆனால், ஆளுங்கட்சியினரும், ஆட்சியில் இருந்தவர்களும் விஜய்க்கு அரசியல் ஆழம் தெரியாது என்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்களோ, விஜய் பேச்சினை டிகோட் செய்து சாதக, பாதகங்களைப் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் சொன்னதுபோலவே, பாரபத்தி மாநாட்டிலும் நமது கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக என்று ஆவேசமாகப் பேசினார். ‘அங்கிள் ஸ்டாலின்’ என்றும் ‘டூர் போகும் மோடி ஜி’ என்றெல்லாம் அரசியல் மேடைக்கு ரசனையாக இருக்கும்படி எழுதப்பட்ட பேச்சை ஆகச் சரியாக டெலிவரி செய்தார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. அவரது முழக்கங்கள், சவால்கள், சுவாரஸ்ய கேள்விகள், குட்டிக் கதையெல்லாம் ஒருபுறம் இருக்க, மாநாட்டில் விஜய் பேச்சில் ஒலித்த அதிமுக மீதான ‘அக்கறை’ தான் நாம் எடுத்துக் கொண்டுள்ள அலசல் புள்ளி.
அரசியல் புதியவர்களுக்கான ஆபத்பாந்தவன் - மதுரை மாநாட்டில், அதிமுகவை விமர்சித்தார் என்பதைவிட, “எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறதே! அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாஜக - அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.” என்று அதிமுகவுக்காக, அதன் தொண்டர்களுக்காக அக்கறையையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார் விஜய். அதுவும் எம்ஜிஆரை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அத்தனை மெனக்கிடல்களுடன் எடுத்துரைத்தார். திரையிலும், அரசியலிலும் தனக்குப் பிடித்தவர். எதிரிகளை கெஞ்ச வைத்தவர் என்றெல்லாம் புகழ்ந்ததோடு, அவரது பாடலைப் பாடியும் அப்ளாஸ் அள்ளினார், விஜய்.
தமிழக அரசியலில் புதியவர்களுக்கான ஆபத்பாந்தவன் எம்ஜிஆர் என்றால் அது மிகையாகாது. தேமுதிக ஆரம்பித்த காலத்தில் விஜயகாந்த், எம்ஜிஆரை புகழ்ந்து போற்றியதை மறந்திருக்க முடியாது. தன்னை ஒரு கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்தாரும் கூட. அந்த ரூட்டில்தான் விஜய்யும் எம்ஜிஆரை ஓர் அஸ்திரமாக எடுத்துள்ளார் எனலாம்.
எம்ஜிஆர் தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் பாஜகவுக்கும் அஸ்திரம்தான். கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி அண்ணாமலை நடத்திய ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவுவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினார். மேடையிலேயே அவர்கள் படமும் இருந்தது. மேலும், அப்போது பாஜக மேற்கொண்ட பிரச்சாரங்களில் எல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் தவறாமல் இடம்பெற்றிருந்தன.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்று யோசிக்கும் பாஜகவாக இருக்கட்டும்... இல்லை, தவெகவாக இருக்கட்டும்... எம்ஜிஆரை புறக்கணிக்க முடியாமல்தான் இருக்கின்றன. எம்ஜிஆர் கட்டி எழுப்பிய தொண்டர் படை அத்தகையது. இன்றளவும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக என்றுதான் மக்கள் வாக்களிக்கிறார்கள். கடந்த தேர்தலில்கூட இரண்டு கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் இடையே குறைவான வித்தியாசமே இருந்தது.
அப்படியிருக்க 3-ம் இடத்துக்கு வருவதற்காக தவெக, எம்ஜிஆரை அஸ்திரமாக எடுப்பது அவருக்கு பலனளிக்காது என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
‘கபளீகர அரசியல்’ - “‘கூட்டம் எல்லாம் ஓகே, இது எப்படி ஓட்டாக மாறும்’ என்று நம்மை விமர்சிக்கின்றனர். தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக இருக்காது. மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக, எங்களை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, நான் ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?” என்று விஜய் சவால் விட்டாலும் கூட எம்ஜிஆரைப் போல் அதை அத்தனையையும், மக்கள் அபிமானமாக, எம்ஜிஆர் இல்லாவிட்டாலும் எத்தனை ஆண்டுகளானாலும் அவருக்காகவே அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்ற பிடிவாதமாக மாற்ற விஜய் கடுமையாக உழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும், திரைவழியாக மக்களை சென்றடைவது இருக்கட்டும், விஜய் எப்போது தெருவில் இறங்கி மக்கள் பிரச்சினையைப் பேசுவார்?. எம்ஜிஆர் தன் திரை பிம்பத்தை மட்டுமே வைத்து அரசியல் ஆளுமையாகவில்லை. அவரைக் கொண்டாடினால், அவர் வழியில் முதல்வராக விரும்பினால், அவரைப் போலவே மக்களை சந்தித்து அரசியல் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுரை சொல்கின்றனர்.
அப்படியல்லாது, எம்ஜிஆரை மேற்கோள் காட்டி அதிருப்தியில் இருக்கும் அதிமுக தொண்டர்களை தனக்கு வாக்களிக்க வைக்கலாம் என்று நினைப்பதெல்லாம் பகல் கனவு. பாஜக பாணியில் அதிமுகவை ‘ஆட்டையப் போடலாம்’ என்று கபளீகர அரசியல் செய்ய நினைத்தால் விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் கணிக்கின்றனர்.
கூட்டணி சஸ்பென்ஸ்: இதற்கிடையில், தவெக ‘சிங்கம் போல் சிங்கிள்’ என்று கூறினாலும், கூட்டணி பற்றி கேட்பவர்கள் எல்லாம் ‘சஸ்பென்ஸிலேயே சஞ்சாரம் செய்யலாம்’ என்றொரு சந்தேகப் புள்ளியையும் வைத்தார் விஜய். ஏற்கெனவே தவெகவுடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியது என்றும், அப்போது விஜய் தனக்கு முதல்வர் பதவி வேண்டும், முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்கு இல்லாவிட்டாலும் கூட இரண்டரை ஆண்டுகள் தவெகவுக்கு வேண்டும் என்று பேரம் பேசினார் என்ற தகவல்களும் உண்டு. இந்தச் சூழலில் அதிமுக சரியான எதிர்க்கட்சியல்ல, அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றெல்லாம் விஜய் விமர்சனம் செய்யவில்லை.மாறாக, அதிமுக இப்போது தனது கட்சியை பொருந்தாத கூட்டணியில் வைத்துள்ளது என்றுதான் சொன்னார்.
தூத்துக்குடி ஸ்னோலின் பற்றிய பேசிய விஜய், அந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது இருந்த அதிமுக பற்றி பேசாதது அப்பட்டமாக அக்கட்சியுடனான மறைமுகக் கூட்டணி என்று விசிக விமர்சித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
அந்தவகையில், ஒருவேளை பாஜகவுடன் முட்டிக்கொண்டு தேர்தலுக்கு முன்னாலேயே அதிமுக ஜகா வாங்கினாலோ அல்லது தேர்தலுக்குப் பின்னர் பாஜகவை கழட்டிவிடலாம் என்ற முடிவுக்கு அதிமுக வந்தாலோ, விஜய் அப்போது அதிமுகவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயங்க மாட்டார்கள் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
உண்மையான தலைவன், நேர்மையான அரசியல், நல்லவர்களுக்கான ஆட்சி என்று அலங்கார வார்த்தைகளில் விஜய் அடுக்கினாலும், அவரது முதன்மைக் குறி கோட்டையாகவும், முதல்வர் பதவியாகவும் தான் இருக்கிறது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், மக்கள் தீர்ப்பால் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். ஆனால் அதனை அடைய அந்த நபர் மக்களுக்காக என்ன செய்கிறார் என்பதே முக்கியம். ஆவேச உரைகளை, அதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விஜய், நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் மக்களுக்காகச் செய்வேன் என்று பட்டியலிட வேண்டும். மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.
அவரது உரையால் ரசிகர்கள், தொண்டர்கள் நெகிழ்ந்து போகலாம். அனால் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக இவர் தான் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று நினைக்க வேண்டுமானால் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அது வார்த்தைகளால் வராது, களப் பணியால்தான் வரும். அதற்கு அவர் போராட்டங்கள், நடைபயணங்கள், அறிக்கைகள், ஏன் கைதாவது வரை நிறையவே செய்ய இருக்கிறது. அதையும்விட, மாநிலம் முழுவதும் அவரது கட்சியினர் மக்களை சென்றடைய வேண்டும். ஒரு பிரச்சினையென்றால் தவெகவில் இவரை அணுகலாம் என்ற அடையாளத்தை கிராமங்கள் வரை கட்டமைக்க வேண்டும்.
தாவெகவின் மாஸ்டர் பிளான் நாள் ஒன்று முதல் ஆட்சி அதிகாரம் என்பதன் அடிப்படையில், ஒரு நல்ல தொடக்கமாக விக்கிரவாண்டி மாநாடு இருந்தது, பாரபத்தி இன்னும் கொஞ்சம் மைலேஜ் கொடுத்துள்ளது, அவ்வளவே. ஆனால் விஜய்க்குதான் எங்கள் ஓட்டு என்று அவரது ரசிகர்கள் அல்லாத மக்களையும் சிந்திக்க வைக்க அவர் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அவர் பாணியிலேயே சொல்ல வேண்டுமானால், ‘நீ நதி போல ஓடிக் கொண்டிரு’ என்று சொல்லலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT