Last Updated : 22 Aug, 2025 03:49 PM

 

Published : 22 Aug 2025 03:49 PM
Last Updated : 22 Aug 2025 03:49 PM

கொடைக்கானலில் மயங்கி விழுந்த தாய் யானை: பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை!

திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில் 50 வயது பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில், அதன் குட்டி தனது தாயைச் சுற்றி வந்து பாசப் போராட்டம் நடத்தியது காண்பவரை துயரில் ஆழ்த்தியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் புலி, யானை, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை கொடைக்கானல் அருகேயுள்ள கோம்பை வனப்பகுதியில் உடல் நிலை சரியில்லாத தாய் யானை, அப்பகுதியில் மயங்கி விழுந்தது. இதைப் பார்த்த அதன் குட்டி யானை தனது தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தது.

இது குறித்து தகவல் கிடைத்து, வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, 50 வயதான தாய் யானை, வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தது தெரிய வந்தது. மேலும், குட்டி யானை தனது தாய்க்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்தது. நீண்ட நேரம் தும்பிக்கையால் தாயின் உடலைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தது.

தாய் யானையின் அருகில் குட்டி யானை, யாரையும் நெருங்கவிடாததால் வனத் துறையினர் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் குட்டி யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நிற்கவே முடியாத நிலையில் படுத்து கிடந்த யானையை கிரேன் உதவியுடன், பெல்ட் மூலம் தூக்கி நிறுத்தி இரவு முழுவதும் சிகிச்சை அளித்தனர்.

அப்போது, யானைக்கு தேவையான குளுக்கோஸ், ஊட்டச்சத்து மாத்திரைகள், பழங்கள் ஆகியவை அளிக்கப்பட்டது. தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது, தொலைவில் இருந்தபடி குட்டி யானை அப்பகுதியை சுற்றி வந்து பிளிறியபடியே இருந்தது. தாயை விட்டு பிரிய முடியாமல், குட்டி யானையின் பாசப் போராட்டம் வேதனையை ஏற்படுத்தியது.

நீண்ட நேரத்துக்கு பிறகு, மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டி யானை சென்றது. சிகிச்சை பெற்று வந்த யானை, வெள்ளிக்கிழமை (ஆக.22) காலை உடல்நலம் தேறிய நிலையில் தானாக எழுந்து நின்றது. இதையடுத்து, அந்த யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இருப்பினும், யானையின் உடல்நலம் மற்றும் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x