Published : 22 Aug 2025 10:21 AM
Last Updated : 22 Aug 2025 10:21 AM
2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி வேட்பாளராக ஜான் பாண்டியனும் கோதாவில் குதித்தார்கள். அதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருமே தங்களது வாரிசுகளை ஒரே தொகுதியில் களமிறக்கிவிட்டு ஆழப் பார்க்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் ஜான் பாண்டியனும் கிருஷ்ணசாமியும் என்டிஏ கூட்டணியில் இருந்தார்கள். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக என்டிஏ கூட்டணியை விட்டு அதிமுக விலகியபோதும் இருவரும் என்டிஏ கூட்டணியில் தொடர்ந்தார்கள். அந்தக் கூட்டணியில் 7-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட ஆயத்தமானார் கிருஷ்ணசாமி.
ஆனால், பாஜக-வை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி, தானே தென்காசியில் போட்டியிடப் போவதாகச் சொல்லி ஆளுக்கு முந்தி சுவர் விளம்பரங்களை எழுதினார். இதில் அப்செட்டான கிருஷ்ணசாமி என்டிஏ கூட்டணியை விட்டு விலகி அதிமுக கூட்டணி வேட்பாளராக தென்காசியில் போட்டியிட்டார்.
இதையடுத்து, பாஜக-வும் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஆனந்தன் அய்யாசாமிக்குப் பதிலாக ஜான் பாண்டியனை நிறுத்தியது. ஆனால் கடைசியில், இருவருமே தோற்று தொகுதியை திமுக தக்கவைத்தது.
அந்தத் தேர்தலில் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அவரது மகனும் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஷியாம் தீவிர பிரச்சாரம் செய்தார். அதேபோல், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகளும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி தலைவியுமான வினோலின் நிவேதா களப்பணி செய்தார்.
தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஜான் பாண்டியன் தனது மகளை நிறுத்த திட்டமிடுவதாக அவரது கட்சியினரே சொல்கிறார்கள். அதேபோல் கிருஷ்ணசாமியும் தனது மகனை இங்கு நிறுத்த களப்பணி செய்வதாக புதிய தமிழகம் கட்சியினர் காதைக்கடிக்கிறார்கள். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிருஷ்ணசாமி, “எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும்” என உறுதியாக தெரிவித்தார். மகன் ஷியாமை மனதில் வைத்தே அவர் இப்படிச் சொன்னதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
இதுகுறித்து ஷியாமிடம் கேட்டதற்கு, “ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என தலைவர் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி இறுதிசெய்யப்பட்டு தொகுதி பங்கீடுகள் முடிந்த பிறகு வேட்பாளர் யார் என்பதை தலைமை அறிவிக்கும்” என்றார்.
ஜான் பாண்டியனிடம் கேட்டதற்கு, “தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடும் வல்லமை எங்களுக்கு உண்டு. மக்களவை தேர்தலில் தென்காசியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றோம். இந்த முறை அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி வலுவடைந்து வருகிறது. எங்களுக்கு கூட்டணி தர்மம் உள்ளது. எனவே, தொகுதி பங்கீடு முடியும் முன், இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன் எனக் கூறுவது சரியாக இருக்காது. ஆனால், எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று” என்றார்.
தென்காசியில் நேருக்கு நேராய் மோதி பரீட்சித்துப் பார்த்த கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் இப்போது வாரிசுகளை ஸ்ரீவில்லிபுத்தூரில் இறக்கிவிட்டு பலத்தை சோதிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், இருவரில் யாருக்கு இந்தத் தொகுதியை கொடுப்பது என முடிவெடுப்பதில் கூட்டணி தலைமைக்குத்தான் கூடுதல் தலைவலியாக இருக்கப் போகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT