Published : 22 Aug 2025 06:23 AM
Last Updated : 22 Aug 2025 06:23 AM
மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளை வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பான செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக கனிமவளச் சட்டத்தின்படி கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிப்புச் செய்வதற்காக பசுமை நிதி உருவாக்கப்பட்டது.
இந்த நிதியில் கைவிடப்பட்ட குவாரிகளைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கனிமவள உதவி இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர், சுற்றுச் சூழல் அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், தீயணைப்பு துறை அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மட்டுமே கைவிடப்பட்ட குவாரிகள் பராமரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 மாவட்டங்களில் மட்டுமே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 14 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் பசுமை நிதி உருவாக்கப்படவில்லை.
பராமரிப்புக் குழு... எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட குவாரிகள் பராமரிப்புக் குழு அமைக்கப்பட்டு, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யவும், கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “தமிழகத்தில் கைவிடப்பட்ட குவாரிகளைப் பாதுகாப்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. எத்தனை கைவிடப்பட்ட குவாரிகள் உள்ளன? இந்த குவாரிகளில் வேலி அமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்? எவ்வளவு நிதி செலவாகும்? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பான செயல் திட்டத்தை அரசு தாக்கல் செய்தால், அதை நிறைவேற்ற உத்தரவிடலாம். எனவே, அரசுத் தரப்பில் கைவிடப்பட்ட குவாரிகள் பாதுகாப்பு தொடர்பான செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2 வாரம் தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT