Published : 22 Aug 2025 05:50 AM
Last Updated : 22 Aug 2025 05:50 AM
சென்னை: ‘பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் இலக்கணமாய் கொள்ள வேண்டிய அடிப்படை பண்புகளை கொண்ட ஒப்பற்ற தலைவர் இல. கணேசன்’ என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். நாகாலாந்து ஆளுநராக இருந்த மறைந்த இல.கணேசனுக்கு பாஜக சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, பாமக, நாதக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு இல.கணேசனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி அனுப்பிய புகழஞ்சலி கடிதத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: என்னோடு தனிப்பட்ட முறையில் அன்பும், நட்பும் பாராட்டிய பண்பாளர் இல.கணேசன். தமிழின் மீது பற்று, தான் ஏற்றக் கொள்கையில் பயணிப்பதற்காக இல்லற வாழ்வில் கூட அடியெடுத்து வைக்காமல் பணியாற்றிய அர்ப்பணிப்பு, நெருக்கடி நிலையை எதிர்த்த துணிச்சல், அரவணைத்து செல்லும் தலைமைப் பண்பு என தனித்த தலைவராக அவர் விளங்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் பெருமதிப்பு காட்டி பழகி வந்தார்.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் இலக்கணமாக கொள்ள வேண்டிய அடிப்படை பண்புகளைக் கொண்ட ஒப்பற்ற தலைவராக விளங்கிய அவரது பெருவாழ்வு எப்போதும் மரியாதை யோடு நினைவுகூரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ‘இல. கணேசனின் மறைவு இந்த தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் செல்லாத கிராமங்களே இல்லை. பாஜகவை தூக்கி நிறுத்திய மாபெரும் தலைவர்’ என்றார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘இல.கணேசனுக்கு ஆளுநராக மத்திய அரசு பொறுப்பு வழங்கியவுடன், அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும். இதற்கான கடிதத்தை அவர் கொடுக்கும்போது, சின்ன பிள்ளைபோல வருத்தப்பட்டார். ஆளுநர் என்ற பொறுப்பு கூட பாஜகவின் தொண்டன் என்னும் பொறுப்பைவிட உயர்ந்தது இல்லை என தெரிவித்தார்’ என்றார். இந்நிகழ்வில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT