Published : 22 Aug 2025 05:37 AM
Last Updated : 22 Aug 2025 05:37 AM
சென்னை: கம்போடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக இளைஞரை மீட்கக் கோரிய வழக்கில் பதிலளிக்காத மத்திய வெளியுறவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் கம்போடியா நாட்டில் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கி, இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கோபியின் தாயார் லதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.
ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கியும், விளக்கமளிக்காததற்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஒரு அமைச்சரின் மகன் அங்கு சிக்கியிருந்தால் இப்படி செயல்படுவீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், கம்போடியாவில் சிக்கியுள்ள தனது மகனுக்கு என்ன ஆனது என தெரியாமல் பரிதவிக்கும் தாயை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முக்கியமானவர்களே. அது பிரதமராக இருந்தாலும் சரி அல்லது சாதாரணக் குடிமகனாக இருந்தாலும் சரி அனைவரும் முக்கியமானவர்கள்தான். எனவே இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருத்தில்கொண்டு ஆக.25-ம் தேதிக்குள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அத்துறையின் செயலர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும், என எச்சரித்து விசாரணையை ஆக.25-க்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT