Published : 22 Aug 2025 12:55 AM
Last Updated : 22 Aug 2025 12:55 AM

தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? - தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் சவால்

மதுரை: மதுரையில் நேற்று மாலை நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மதுரை பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக மேற்கொண்டிருப்பது உண்மையான, உணர்வுப்பூர்வமான, நல்ல அரசியல், நல்லவர்களுக்கான அரசியல். தமிழகத்தில் 1967, 1977-ல் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததுபோல, வரும் 2026-ம் ஆண்டிலும் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போவதை உறுதியாக சொல்கிறது இந்த மாநாடு.

‘கூட்டம் எல்லாம் ஓகே, இது எப்படி ஓட்டாக மாறும்’ என்று நம்மை விமர்சிக்கின்றனர். தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஓட்டாக இருக்காது. மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக, எங்களை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, நான் ஆட்சியைப் பிடித்துக் காட்டட்டுமா?

நாங்கள் மக்களின் இதயமாக, அவர்களது வீடுகளில் உயிராக, உறவாக,உணர்வாக இருக்கிறோம். மக்களோடு மட்டும்தான் நமக்கு கூட்டணி. நமது கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக. மறைமுக ஆதாயத்துக்காக, யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட மாட்டோம். பெண்கள், இளைஞர்கள் சக்தி, ஒட்டுமொத்த தமிழக மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் 2026-ல் இரண்டு பேருக்குதான் போட்டியே. ஒன்று டிவிகே, இன்னொன்று டிஎம்கே.

தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்கிறது. கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள், நீட் விலக்கு பெற்று தாருங்கள். இதையெல்லாம் செய்ய மத்திய பாஜக அரசு மறுக்கிறது. கீழடி நாகரிகத்தை மறைக்கிறது. எம்ஜிஆர் இருக்கும் வரை, முதல்வர் பதவி பற்றி யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது? அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாஜக - அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.

ஸ்டாலின் அங்கிள், மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள். உங்கள் ஆட்சியில் நியாயம் இருக்கா? ஊழல் இல்லாத ஆட்சியா இது? பெண்கள், குழந்தைகள், இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். மக்களே நீங்கள் சொல்லுங்கள். ‘செய்வோம், செய்வோம்’ என்றார்களே, சொன்னதை எல்லாம் செய்தார்களா? (தொண்டர்கள் கோஷம்). இது சாதாரணமுழக்கம்தான். கூடிய சீக்கிரம் மக்களை சந்திக்கப் போகிறேன். அதற்கு பிறகு இது இடி முழக்கமாக, போர் முழக்கமாக மாறும். அது உங்களை ஒருநிமிடம்கூட நிம்மதியாக தூங்கவிடாது.

நான் மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் வந்துள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியை தொடங்கியுள்ளோம். தமிழகத்தின் 234 தொகுதியிலும் இந்த விஜய்தான் வேட்பாளர். என் முகம்தான் உங்கள் சின்னம். இவ்வாறு அவர் பேசினார்.

முக்கிய தீர்மானங்கள்:‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஜனநாயக விரோதம். தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவைகைவிட வேண்டும். காதல் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பாமல் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பவேண்டும்.

மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம். சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலுக்கு கண்டனம் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு திடலின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பாதையில் நடந்து வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x