Published : 21 Aug 2025 05:58 PM
Last Updated : 21 Aug 2025 05:58 PM

சென்னை மாநகரில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்!

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது. பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப் பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க செய்தும், கட்டாயம் கழுத்துப் பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரியவிட்டாலோ, அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரிய வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் உரிமம் பெற்ற, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும், மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக் கூடும். இதை உரிமையாளர்கள் உணர்ந்து, பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும்.

பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்தூக்கிகளில் மற்றவர்களுக்கு அச்சமூட்டும் வகையிலோ, அசவுகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

இதை மீறி உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை. பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீதும், உரிமையாளர்களின் மீதும் உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x