Published : 21 Aug 2025 05:12 PM
Last Updated : 21 Aug 2025 05:12 PM
சென்னை: “மதுரை தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை எதற்காக வைத்திருக்கிறார்? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டையொட்டி கட்சி சார்பில் மதுரை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்காவது பேனர்களை வைத்தபின் அகற்றச் சொல்கின்றனர். எங்களை எல்லாம் வைக்கவே விடாமல் தடுக்கின்றனர். அரசியலில் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து தான் வர வேண்டும்.
தவெக மாநாட்டில் மக்களின் முன்பு அக்கட்சித் தலைவர் விஜய் முன்வைக்கும் தத்துவங்களை வைத்துதான் அவர் தம்பியா அல்லது எதிரியா என்பது தெரியவரும். திரும்பவும் திராவிடம், அதே கோட்பாடு, அதே கொள்கை என திமுகவை ஒழிப்பது மட்டுமே ஒருவருக்கு லட்சியமாக இருக்க முடியாது. தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்ன மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
அண்ணா தோற்றுவித்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார் விஜய். ஆனால் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை மாநாட்டில் வைத்திருக்கிறார். எதற்காக? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?
விஜய்யின் பின்னால் திரண்டிருக்கும் ரசிகர்கள் அவருக்கு நண்பா, நண்பிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு தம்பி, தங்கைகள். அவர்களுக்கு சரியான அரசியல் பாதையை சொல்ல வேண்டியது நமது கடமையாகும். அதற்கு சரியான தத்துவத்தை முன்வைத்து நகர வேண்டும். ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால் அதில் உறுதியாக நின்று செயல்படவேண்டும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் சாரத்தை கொண்டுவருவதற்கு இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT