Published : 21 Aug 2025 05:06 PM
Last Updated : 21 Aug 2025 05:06 PM

ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர், மாமனார், மாமியாருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ரிதன்யாவின் முழுமையான உடற்கூராய்வு, தடயவியல் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்திருக்கிறார். திருமணத்தில் அவருக்கு விருப்பமும் இல்லை. வரதட்சணை துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

விசாரணை நிலைகுறித்த அறிக்கையை தாக்கல் செய்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ரிதன்யாவின் ஆடியோ மெசேஜ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ரிதன்யாவை துன்புறுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் மனுதாரர்கள் செல்வாக்கானவர்கள் என்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக சுட்டி காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது என்பதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x